வீட்டை பூட்டிக் கொண்டு செல்போன் கேம் விளையாடிய மாணவனுக்கு வெறி பிடித்தது..! பெற்றோர்களே இனியாவது உஷார்
Published : Oct 04, 2023 6:29 AM
வீட்டை பூட்டிக் கொண்டு செல்போன் கேம் விளையாடிய மாணவனுக்கு வெறி பிடித்தது..! பெற்றோர்களே இனியாவது உஷார்
Oct 04, 2023 6:29 AM
அரக்கோணத்தில் வீட்டில் தனியாக அமர்ந்து செல்போனிலும், கம்யூட்டரிலும் வீடியோ கேம் விளையாடிய கல்லூரி மாணவர் ஒருவர் வெறிப்பிடித்த மன நிலைக்கு மாறியதால் கைகளை கட்டி ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தான் என்ன பேசுகிறேன் என்பதை கூட உணர இயலாமல் தாயைகூட அவதூறாக பேசியபடி மருத்துவமனையில் அமர்ந்துள்ள இவர் தான் செல்போன் கேமுக்கு அடிமையானதால் வெறிப்பிடித்த நிலைக்கு மாறிய கல்லூரி மாணவன்..!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த காலிவாரி கண்டிகை பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவரான இவர் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஇ., படித்து வந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் தனியாக உள்ள போது இரவு பகல் பார்க்காமல் அதிகளவில் செல்போன் மற்றும் கம்யூட்டரில் கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு இவரது தந்தை இறந்த நிலையில் அண்ணன் வெளிநாட்டில் பணியாற்றி வருவதால் அவர் அனுப்பும் பணத்தில் தாய் இந்த மாணவரை பராமரித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வரை நன்றாக இருந்த மாணவர் திடீரென்று வெறிபிடித்த நபர் போன்று வீட்டிலுள்ளவர்களை அவதூறாகவும் ஆபாசமாக பேசின் அடிக்கப்பாய்ந்தார். எதிரில் வருபவர்களை தாக்க முயல்வது போலவும் நடந்து கொண்ட சம்பவத்தால் மிரண்டு போன தாய், பாதிக்கப்பட்ட மகனை கைகளை கட்டி சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
அங்கும் மருத்துவர்களை மிரட்டும் வகையில் பேசி சத்தமிட்டதால் மாணவரை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்
முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட இளைஞரின் கை, கால்கள் கட்டப்பட்டது. அப்போது தனக்கு எதிரே இருந்த நபரை மிரட்டினார் அந்த மாணவர்
படுத்திருந்தவர் எழுந்ததால் அவரை படுக்க சொன்ன போது ஆம்புலன்ஸ் ஊழியரிடமும் முறைத்துக் கொண்டார். இதையடுத்து உறவினர் ஒருவர் துணையுடன் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அந்த மாணவர் ஜப்பான் அனிமேசன் தொடர்களில் வரும் சுஹுனா என்ற கதாபாத்திரத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் அந்த கதாபாத்திரம் போலவே மாறிவிட்டதாக கூறப்படுகின்றது
என் மகன் சமத்து... ஒரு செல்போன கொடுத்தா போதும், வீட்டுக்குள்ளேயே இருந்து கேம் விளையாடிக் கொண்டிருப்பான் ... வெளியே போய் கெட்ட பசங்க சகவாசம் எல்லாம் அவனுக்கு கிடையாது என்று பெருமைபட்டுக் கொள்ளும் தாய்மார்களே உஷாராக இருங்கள் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்