அவிநாசி அருகே பந்தம்பாளையம் கிராமத்தில் உள்ள மனமகிழ் மன்றத்தை அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மனமகிழ் மன்றத்தால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என ஏற்கனவே பொதுமக்கள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் மனமகிழ் மன்றம் தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் 3 கிராம பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய, அவிநாசி தாசில்தார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
ஆனால் இதுவரை மனமகிழ் மன்றம் அகற்றப்படாததால் மீண்டும் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அவிநாசி வட்டாட்சியர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் மனமகிழ் மன்றம் செயல்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.