தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக தலைநகர் பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் போராட்டத்திற்கு 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
முழு அடைப்பைத் தொடர்ந்து பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முழு அடைப்புக்கு இடையே பெங்களூருவில் அரசுப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. ஆட்டோக்கள், டாக்சிகள் இயக்கப்படவில்லை.
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கிய மையமாக விளங்கும் ஒயிட்ஃபீல்டு பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூடப்பட்டு, வீட்டில் இருந்து பணியாற்ற ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
போராட்டம் எதிரொலியாக தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூசுவாடி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.