காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறந்து விடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Karnataka Jala Samrakshana Samithi நடத்தும் இந்த போராட்டத்திற்கு விவசாயிகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் கர்நாடக பாரதிய ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. முழு அடைப்புக்கு அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆனால், அரசு பஸ்கள், மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக பெங்களூரு நகர மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க பெங்களூரு நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகாவுக்கு உள்ளேயும், கர்நாடகா வழியாகவும் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் மாநில எல்லைகளிலேயே நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.