சாலையோர குடிகாரர் போலீஸ் கையை கடித்தார்.. குடிப்பதை தடுத்ததால் ஆவேசம்..! கள்ளச்சந்தையில் வித்தா கண்டுக்க மாட்டீங்களா...
Published : Sep 25, 2023 4:22 PM
சாலையோர குடிகாரர் போலீஸ் கையை கடித்தார்.. குடிப்பதை தடுத்ததால் ஆவேசம்..! கள்ளச்சந்தையில் வித்தா கண்டுக்க மாட்டீங்களா...
Sep 25, 2023 4:22 PM
சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் சாலையோரம் இருசக்கரவாகனத்தை நிறுத்தி மது அருந்தியதைக் கண்டித்த காவலரிடம், கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதையெல்லாம் கேட்க மாட்டீங்களா என ஆவேசமான குடிகாரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீசாரின் கையைக் கடித்த கூத்து அரங்கேறி உள்ளது.
மதுபோதையில் காவலரின் கையைக் கடித்து அட்ராசிட்டியில் ஈடுபட்டு, ஊர் நியாயம் பேசிய உணவு டெலிவரி ஊழியர் சதீஷ் இவர் தான்.
சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கண்ணகிநகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முத்து செழியன் மற்றும் தலைமைக் காவலர் சிலம்பரசன் ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் காரப்பாக்கம் ஓடை அருகே தனியார் மகளிர் கல்லூரிக்கு செல்லும் வழியில் சாலையோரமாக நின்று இருவர் மது அருந்தி கொண்டிருந்ததை கண்டனர் காவலர்கள்.
நீங்கள் யார் ?, எதற்காக இங்கு நிற்கிறீர்கள் எனக் கேட்டு அவர்களை அங்கிருந்து விரட்ட முயன்றுள்ளனர் காவலர்கள். ஆனால், மது போதையில் இருந்த அப்பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் காவலர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
கள்ளச்சந்தையில் சரக்கு விற்கிறான் அவனிடம் போய் உங்களால் கேட்க முடியுமா ?, அங்கு மாமூல் வாங்கி விட்டு என்னை வந்து விரட்டுகிறாயா எனக் கேட்டு ஒருமையில் திட்டத் துவங்கினார் சதீஷ்.
உடன் வந்த நபர் சதீஷ்க்கு இரண்டு அறை விட்டு அதட்டியும் அடங்காத சதீஷோ, தன்னை அதட்டியவரிடம் நீ வாயை மூடு என்று கூறி விட்டு, காவலர் சிலம்பரசனை திடீரென தாக்கத் தொடங்கினார்.
இதனை, தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துக் கொண்டே, கண்ணகிநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் எஸ்.எஸ்.ஐ முத்து செழியன். டூவீலர் சாவியை பிடுங்க முயன்ற போலீஸாரிடம், ஸ்டேசனுக்கு தானே வரவேண்டும். அங்கு வந்து பார் நான் யார் என்று தெரியும் எனக் கூறிக் கொண்டே, வண்டியை ஸ்டார்ட் செய்ய முயன்று குப்புற விழுந்தார் சதீஷ்.
எழுந்து வந்த சதீஷ், காவலர் சிலம்பரசனோடு, சண்டையிட்டு அவரது கையை கடித்து வைத்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் போலீஸார், சதீஷை கொத்தாக தூக்கி காவல் நிலையத்திற்கு கொண்டுச் சென்றனர்.
கடி வாங்கிய காவலர் சிலம்பரசன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில், சதீஷ் மீது மட்டும் சாதாரண பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.