கனடாவில் காலிஸ்தான் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் சில வாரங்களுக்கு முன்பே உளவுத்துறையின் தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்துக் கொண்டதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருந்த நிலையில் எந்த குறிப்பிட்ட ஒரு தகவலையும் கனடா பகிரவில்லை என்று இந்திய வெளியுறவு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இந்தியா மீது தாம் கூறிய குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் எதையும் வெளியிடாத கனடா பிரதமர், இந்தியாவிடம் தேவையான ஆதாரங்களை முன்பே ஒப்படைத்து விட்டதாக கூறியிருந்தார்.
5 ஐஸ் என்றழைக்கப்படும் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து , ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளின் உளவுக்கூட்டணியின் அடிப்படையில்தான் ட்ரூடோ இந்தியா மீது குற்றம் சாட்டியிருப்பதாகவும் இந்த வழக்கின் விசாரணையில் இந்தியா கனடாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா அறிவித்திருந்தது.
இந்நிலையில் கனடா அரசு எந்த ஒரு குறிப்பிட்ட ஆதாரத்தையும் தகவலையும் பகிரவில்லை என்று இந்திய வெளியுறவு அதிகாரிகள் தரப்பில் மறுப்பு வெளியாகியுள்ளது.