வாங்கியது ரூ 24 லட்சம்.. கட்டியது ரூ 18 லட்சம்... மீதமுள்ளது ரூ 32 லட்சமாம்..! கனரா வங்கி அதிகாரிகளின் இரவு வசூல்
Published : Sep 23, 2023 9:53 PM
வாங்கியது ரூ 24 லட்சம்.. கட்டியது ரூ 18 லட்சம்... மீதமுள்ளது ரூ 32 லட்சமாம்..! கனரா வங்கி அதிகாரிகளின் இரவு வசூல்
Sep 23, 2023 9:53 PM
விவசாயி ஒருவரின் வீட்டில் பெண்கள் தனியாக இருந்த போது இரவு நேரத்தில் கனரா வங்கி அதிகாரிகள் வீடு புகுந்து கடனை கேட்டு வம்பு செய்ததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, விவசாயி குடும்பத்துக்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர் தாக்கப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
வீட்டுக்கடனை வசூலிக்க இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து ஏழரையை கூட்டிய கனரா வங்கி அதிகாரிகள் இவர்கள் தான்..!
தருமபுரி ஹரிஹர நாதர் கோவில் தெருவில் வசிக்கும் விவசாயியான கிருஷ்ணன் என்பவர் கடந்த 2014ம் ஆண்டு வீடு கட்டுவதற்காக கனரா வங்கியில் 24 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். 18 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்திய நிலையில், கடந்த 3 மாத தவணை செலுத்தவில்லையென கூறப்படுகிறது. பகலில் வீட்டை பூட்டி விட்டு சென்று விடுவதால் இரவு 8 மணிக்கு மேல் வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது கிருஷ்ணன் வெளியே இருந்ததால் தனது நண்பரான வழக்கறிஞர் காவேரிவருமன் என்பவரிடம் தெரிவித்துள்ளார். அங்குச் சென்ற வழக்கறிஞர், வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும் போது இரவு நேரத்தில் எப்படி உள்ளே வரலாம் ? என்று அதிகாரிகளிடம் கேட்க, ரெக்கவரிக்கு வந்திருப்பதாக கூறி அதிகாரிகள் குரல் எழுப்ப கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது
ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டதால் கைகலைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த வழக்கறிஞர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வங்கி அதிகாரிகளோ, வட்டியுடன் சேர்த்து கிருஷ்ணன், தங்களுக்கு 32 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்றும், தவறினால் வீட்டை ஜப்தி செய்வோம் என்றும் கூறிச்சென்றனர். அதே நேரத்தில் வங்கியில் கடன் பெற்றுவிட்டு முறையாக தவணை செலுத்த தவறினால் இது போன்ற சிக்கல்கள் வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்