தஞ்சை தமிழர்களை ஏமாற்றி அர்மீனியா நாட்டில் பிச்சை எடுக்க வைத்த கொடுமை..! நாடு திரும்ப இயலாமல் தவிப்பு
Published : Sep 23, 2023 6:34 AM
தஞ்சை தமிழர்களை ஏமாற்றி அர்மீனியா நாட்டில் பிச்சை எடுக்க வைத்த கொடுமை..! நாடு திரும்ப இயலாமல் தவிப்பு
Sep 23, 2023 6:34 AM
குடும்ப கஷ்டத்தை போக்க ஏஜென்ஸிகளை நம்பி தமிழகத்தில் இருந்து அர்மீனிய நாட்டுக்கு வேலைக்கு சென்ற 30 இளைஞர்கள் தங்க இடமின்றியும், சாப்பாட்டுக்கு வழியின்றியும், வீதியில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளனர்.
மாதம் 65 ஆயிரம் ரூபாய் சம்பளம் பிளஸ் டிப்ஸ்... கிடைக்கும் என்ற மோசடி ஏஜென்ஸிகளின் தேன் தடவும் வார்த்தைகளை நம்பி இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து டூரிஸ்ட் விசாவில் அர்மீனியா நாட்டுக்கு சென்று தஞ்சை தமிழர்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இவர்கள் 30 பேரும் சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவரின் கிருஷ் டிராவல்ஸ் அண்ட் கல்சல்டன்ஸி மற்றும் புதுச்சேரியை சேர்ந்த நிசான் எஜூகேசனல் கன்சல்ட்டண்ட் ஆகிய இரு நிறுவனங்களால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள். ஒவ்வொருவரிடமும் ஒன்றரை லட்சம் முதல் இரண்டரை லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு கை நிறைய சம்பளம் என்று அர்மீனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
டூரிஸ்ட் விசாவில் சென்று அங்கு இறங்கிய பின்னர் தான் அவர்களுக்கு தெரியவந்தது, தங்களுக்கு மதம் 20 ஆயிரம் ரூபாய் கூட வருமான வராது என்று.. அங்குள்ள ஏஜென்ஸி ஒன்று 15 நாட்கள் வேலை வாங்கி விட்டு சம்பளமும் தராமல், தங்க இடமும் கொடுக்காமல் விரட்டி உள்ளது.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல், கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டு அரை வயிறும் கால்வயிறுமாக சாப்பிட்டும் சாப்பிடாமலும், பிச்சைக்காரர்கள் போல வீதியில் கடும் குளிரில் தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
இவர்களின் தவிப்பை அறிந்த சவுதி அரேபியாவில் உள்ள வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின் தலைவர் வாஹித், மற்றும் திவான் ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில் அர்மீனியாவில் உள்ள தெரிந்தவர்களின் இருப்பிடங்களில் தற்காலிகமாக தங்குவதற்கும், சாப்பாட்டிற்கும் வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஏஜென்ஸிகளின் மோசடியால் அர்மீனியாவில் சாப்பாட்டிற்கே வழியின்றி தவிக்கும் 30 பேரையும் மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க, வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள வெளி நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், இந்த விவகாரம் குறித்து முதல் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் அங்கு தவிக்கும் 36 பேரை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.