காரைக்கால் செட்டிநாடு ஓட்டலில் கெட்டுப்போன சிக்கன், ஊசிப்போன சோறு பறிமுதல்..! உளுந்தூர்பேட்டையில் அதிகாரிகள் அதிரடி
Published : Sep 22, 2023 6:42 AM
காரைக்கால் செட்டிநாடு ஓட்டலில் கெட்டுப்போன சிக்கன், ஊசிப்போன சோறு பறிமுதல்..! உளுந்தூர்பேட்டையில் அதிகாரிகள் அதிரடி
Sep 22, 2023 6:42 AM
உளுந்தூர் பேட்டை டோல் கேட் பகுதி ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், காரைக்கால் செட்டி நாடு ஓட்டலில் இருந்து கெட்டுப்போன சிக்கன் , ஊசிப்போன சோறு உள்ளிட்ட உணவு வகைகளை கைப்பற்றி அழித்தனர்.
தென்மாவட்டங்களில் இருந்து கார்களில் சென்னைக்கு வரும் பெரும்பாலானவர்களின் மதிய உணவுக்கு தேர்வாக இருக்கும், உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதி பிரமாண்ட ஓட்டல்களில் தான் கள்ளக்குறிச்சி உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
வரிசையாக ஒவ்வொரு ஓட்டலாக அதிகாரிகள் ஆய்வுக்கு சென்ற நிலையில் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான காரைக்கால் செட்டி நாடு உணவகத்திலும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு 3 வது முறையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் குளிர்பதனப்பெட்டிக்குள் இருந்து 50 கிலோவுக்கும் மேற்பட்ட அழுகிய கோழி இறைச்சியை அதிகாரிகள் கைப்பற்றினர்
மசாலா தடவி வேக வைக்கப்பட்ட சிக்கன் கெட்டுப் போயிருப்பதை கண்டு அதனையும் கைப்பற்றி குப்பையில் கொட்டினர்
தந்தூரி சிக்கன், பூஞ்சையுடன் காணப்பட்ட சப்பாத்தி மாவு உருண்டைகளையும் கைப்பற்றினர்
டப்பாக்களில் இருந்த ஊசிப்போன சோறு, முந்தின நாள் தயார் செய்யப்பட்ட சப்பாத்தி ரொட்டிகள், மற்றும் புரோட்டாக்களையும் கைப்பற்றிய அதிகாரிகள் அதன் மீது பினாயிலை ஊற்றி அழித்தனர்
ஏற்கனவே வேறு எங்கோ தயாரான பொருட்களை சூடு செய்து கொடுப்பதை காரைக்கால் செட்டி நாடு உணவகத்தினர் செய்து வருவது விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அதே போல அருகில் இருந்த ஸ்ரீ கலா மெஸ் என்ற ஓட்டலில் ஆய்வு செய்த அதிகாரிகள் அங்கிருந்து கிலோ கணக்கில் கெட்டுபோன சிக்கனை பறிமுதல் செய்தனர்
அங்கு அதிக நிறம் சேர்க்கப்பட்ட கெட்டுபோன சிக்கன் உணவுவகைகளை கைப்பற்றி அழித்தனர்
மானாமதுரை ஸ்ரீ கண்ணன் செட்டினாடு ஓட்டலில் இருந்து , கலர் அதிகம் சேர்க்கப்பட்ட சிக்கனையும், கெட்டுபோன சிக்கனையும் கைப்பற்றி அழித்தனர்
கிருஷ்ணகிரியில் மார்க் ஆண்டனி படம் திரையிடப்பட்டுள்ள, பழைய திரையரங்கு ஒன்றில் இருந்து ஊசி போன பப்ஸ், சிலந்தியுடன் சிப்ஸ் பாக்கெட்டுகளை கைப்பற்றிய அதிகாரிகள் அவற்றை அழித்தனர்.