இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தகுதி மதிப்பெண்கள் பூஜ்ஜியம் பர்சன்டைல் ஆக குறைக்கப்பட்டிருப்பது மருத்துவக் கல்வியின் தரத்தை எந்த வகையிலும் உயர்த்தாது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டிற்கான முதுநிலை நீட் தேர்வில் 30 பேர் ஒற்றை இலக்கத்திலும், 14 பேர் பூஜ்ஜியமும், 13 பேர் எதிர்மறை மதிப்பெண்களும் பெற்றுள்ளதாக குறிப்பிட்டு, அவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு இப்போது கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முதுநிலை கல்வி இடங்களுக்கு மும்மடங்கினர் தகுதி பெற்றுள்ள போது, தகுதி மதிப்பெண்களை குறைத்து கூடுதலாக 80,000 பேருக்கு தகுதி வழங்க தேவை என்ன? என்று அவர் வினவியுள்ளார்.
மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கவும் நீட் எந்த வகையிலும் உதவவில்லை என்பதால் அனைத்து நிலைகளிலும் நீட்டை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.