தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கன்வேயர் பெல்ட் சப்ளை செய்யும் ராதா இன்ஜினியரிங் குழுமத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு மின்சார வாரியம் இறக்குமதி செய்யும் நிலக்கரிகளை சப்ளை செய்யும் நிறுவனத்திடம் இருந்து வாங்கி அனல் மின் நிலையத்திற்கு கன்வேயர் பெல்ட் மூலம் அனுப்பும் ஒப்பந்த பணிகளை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செய்து வருகிறது.
இந்த நிறுவனம் சுமார் 10 ஆண்டுகளாக தமிழ்நாடு மின்வாரியத்தில் கன்வேயர் பெல்ட் கடை சப்ளை செய்யும் முக்கிய முகவராக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
கன்வேயர் பெல்ட்களை அதிக விலைக்கு சப்ளை செய்து அதை முறையாக கணக்கு காண்பிக்காமல் போலியான ரசீதுகளை பயன்படுத்தியதாக கூறப்பட்ட புகாரையடுத்து, நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை, ஜாபர்கான் பேட்டையில் ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், சிறுசேரி, திருவள்ளூர் வெள்ளிவாயில் சாவடி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. திருவொற்றியூரில் அந்நிறுவன பொது மேலாளர் கணேசன் வீட்டில் ரெய்டு நடக்கிறது.
இதுதவிர மேட்டூர், தூத்துக்குடி அனல் மின் நிலையங்களிலும், சோதனை நடைபெறுகிறது.