ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் செயல்பாடுகளுக்கு எதிராக தமிழ்நாடு மற்றும் தெலங்கானாவில் 31 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கோவையில் 22 இடங்களிலும், சென்னையில் 3 இடங்களிலும், கடையநல்லூரில் ஒரு இடத்திலும் இந்த ஆய்வு நடந்ததாக என்.ஐ.ஏ. அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
82-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரும் மாநகராட்சி வரி விதிப்பு குழு தலைவருமான முஃபஷீராவின் வீடு உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனைகளின் போது மொபைல் ஃபோன்கள், மடிக்கணினிகள், ஹார்ட் டிஸ்குகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ள என்.ஐ.ஏ., ஆங்கிலம் மற்றும் அரபு மொழியில் ஆட்சேபத்துக்குரிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறியுள்ளது. 60 லட்ச ரூபாய் இந்தியப் பணமும், 18,200 ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரபு மொழி வகுப்பு என்ற போர்வையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்குப் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்ததாகவும், வாட்சப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் கணக்குத் தொடங்கி இளைஞர்களை மூளைச்சலவை செய்து வந்ததாகவும் என்.ஐ.ஏ. கூறியுள்ளது.