செந்தில்பாலாஜி வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு.. !!
Published : Sep 05, 2023 6:36 AM
செந்தில்பாலாஜி வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு.. !!
Sep 05, 2023 6:36 AM
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அதேபோல செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவரும் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நடைபெற்றது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், அரசியல் சட்ட பிரிவுகளையும், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி, குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர, ஒருவர் அமைச்சராக நீடிக்க எந்த தகுதி இழப்பும் இல்லை என்றார்.
மேலும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் அமைச்சராக நீடிக்க, அரசியல் சட்டமோ, சட்ட விதிகளோ தடை செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு வாதிட்டார்.
எம்.எல்.ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக்திவேல் வாதிடும்போது, அமைச்சரவை ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்றாலும், சில விதிவிலக்குகள் உள்ளதாகவும், அதுபோன்ற சூழல் நிலவுகிறதா இல்லையா என பார்க்க வேண்டும் என்றார்.
ஜெயவர்த்தன் தரப்பில் பதில் வாதம் செய்த மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, தன் கண்முன் நடக்கும் சட்டவிரோதங்களை கண்டு, சட்ட அதிகாரம் இல்லை என ஆளுநர் இருக்க முடியாது என்றார்.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை விரும்பவில்லை என ஆளுநர் தெரிவித்திருக்கிறார் என்றும் ஆனாலும் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பார் என முதலமைச்சர் அறிவித்தார் என்றும் தெரிவித்தார். ஆளுநரின் நம்பிக்கையை பெறாத நபர் அமைச்சராக நீடிக்க முடியாது என அவர் வாதிட்டார்.
இந்த வழக்கில் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி வழக்குகளின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பளிக்கிறது.