அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளிநாட்டிற்கு அம்புரு புனித பயணம் சென்றுள்ள நிலையில் திமுகவில் அவரது மகன் மற்றும் மருமகனின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். அவரது மகன் மொக்தியார் அலி மஸ்தான் விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராகவும், அவரது மருமகன் ரிஸ்வான் விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளராகவும் இருந்து வந்தனர்.
திண்டிவனம் நகராட்சியில் அமைச்சர் மஸ்தானின் மருமகன் ரிஸ்வானின் தலையீடு அதிக அளவில் இருப்பதாக கூறி அதிருப்தி கவுன்சிலர்கள் 13 பேர் வெளிநடப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அதன் உச்சபட்சமாக 13 கவுன்சிலர்களும் ராஜினாமா கடிதத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்க முடிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அமைச்சரின் சகோதரர் காஜாநஜீர் செஞ்சி நகர செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அமைச்சர் மஸ்தானின் மகன் மொக்தியார் அலி, மருமகன் ரிஸ்வான் ஆகிய இருவரையும் கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.