அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணப்பரிவர்த்தனை முறைகேட்டில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை, வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமும், முதன்மை அமர்வு நீதிமன்றமும் விசாரிக்க மறுத்தன.
இதையடுத்து, ஜாமீன் மனுவை விசாரிக்கும் அதிகாரம் எந்த நீதிமன்றத்துக்கு உள்ளது என்பது குறித்து முடிவெடிக்க, சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வு, ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதே தவறு என்றும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமாக அறிவிக்கப்பட்ட அரசாணை, மத்திய அரசு சட்டத்துக்கு மேலானது அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளையும் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.