​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வழக்கமான உற்சாகத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய கேரள மக்கள்.. பாடல் பாடியும், நடனம் ஆடியும் மகிழ்ச்சி..!

Published : Aug 29, 2023 3:38 PM

வழக்கமான உற்சாகத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய கேரள மக்கள்.. பாடல் பாடியும், நடனம் ஆடியும் மகிழ்ச்சி..!

Aug 29, 2023 3:38 PM

கேரளாவில் வழக்கமான உற்சாகத்துடன் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலையாள மொழி பேசும் மக்களுக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் வாழ்த்து செய்தியில், செழுமை, சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தின் கொண்டாட்டமான ஓணம், ஜாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பால் மனித ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் எனக் கூறினார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மலையாள மொழியில் ஓணம் வாழ்த்து தெரிவித்தார்.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யும், நடிகருமான சுரேஷ் கோபி ஓணம் திருவிழாவை தொடங்கி வைத்தார். திருவிதாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஆதித்ய வர்மா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

திருவனந்தபுரம் பழவங்காடி மகா கணபதி கோயில், கொச்சி திருக்காக்கரை வாமன மூர்த்தி ஆலயம் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற ஓணம் சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

பாரம்பரிய உடை அணிந்தும், அத்தப்பூ கோலமிட்டும், ஓணம் பாடல் பாடியும், நடனம் ஆடியும் பெண்கள் ஓணத்தை கொண்டாடினர்.

ஓணத்தை ஒட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டியில் ஏராளமான பெண்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர். மேலும் செண்டை மேளத்திற்கு ஏற்ப நடனமாடி ஓணத்தை கொண்டாடினர்.

கண்ணூரில் மகாபலி சக்கரவர்த்தி வேடமணிந்த இளைஞர் ஒருவர் மேள தாளங்கள் முழங்க வீடு வீடாக சென்று மக்களுக்கு திருவோண வாழ்த்து தெரிவித்தார்.