தாம் தொடங்கி வைத்த பல்வேறு திட்டங்களில் காலை உணவு திட்டம் தான் மனதுக்கு நிறைவைத் தருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்கப் பள்ளிகளில் 33 கோடியே 56 லட்ச ரூபாயில் செயல்படுத்தப்பட்டது.
திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, அனைத்து தொகுதிகளிலும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பயின்ற பள்ளியில் இத்திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர், அவர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்டார்.
தொடர்ந்து திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியாவில் புதுப்புது திட்டங்களை கொண்டு வந்து முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றார்.
காலை உணவு திட்டம் மூலம் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் அவர் கூறினார்.