​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
6 தேசிய விருதுகளை தட்டித்தூக்கிய 'ஆர்.ஆர்.ஆர்.' 'கடைசி விவசாயி' படத்துக்கு 2 தேசிய விருதுகள்..!

Published : Aug 24, 2023 5:49 PM



6 தேசிய விருதுகளை தட்டித்தூக்கிய 'ஆர்.ஆர்.ஆர்.' 'கடைசி விவசாயி' படத்துக்கு 2 தேசிய விருதுகள்..!

Aug 24, 2023 5:49 PM

2021-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2021-க்கான சிறந்த திரைப்படமாக நடிகர் மாதவன் நடித்து இயக்கிய ராக்கெட்ரி படமும், சிறந்த தமிழ்த் திரைப்படமாக விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி படமும் தட்டிச் சென்றுள்ளன.

69-வது தேசிய திரைப்பட விருதுகளை தேசிய திரைப்பட விருதுகளுக்கான தேர்வுக் குழு டெல்லியில் அறிவித்தது. இதன்படி, கருவறை ஆவணப் படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது.

பிரபல படத்தொகுப்பாளர் பி. லெனின் இயக்கியுள்ள சிற்பிகளின் சிற்பங்கள் தமிழ்த் திரைப்படத்துக்கு கல்வியியலுக்கான சிறந்த திரைப்பட விருது வழங்கப்படுகிறது.

எம். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த கடைசி விவசாயி திரைப்படம் 2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெறுகிறது. கடைசி விவசாயி படத்தில் விவசாயியாக நடித்திருந்த மறைந்த நல்லாண்டிக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

பாகுபலி இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜ் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் சிறந்த சண்டைப் பயிற்சி, சிறந்த நடன அமைப்பு, சிறந்த ஸ்பெஷ்ல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஆண் பின்னணி பாடகர் ஆகிய பிரிவுகளில் தேசிய விருதுகளை தட்டிச் சென்றது.

சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருதை அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா படத்துக்காக தேவி ஸ்ரீபிரசாத் பெறுகிறார்.

சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ஆஸ்கர் விருது வென்ற எம்.எம். கீரவாணி ஆர்.ஆர்.ஆர். படத்துக்காக வழங்கப்படுகிறது.

ஆலியா பட் நடித்த கங்குபாய் கத்தியாவாடி படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான விருதும், அந்த படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு சிறந்த படத்தொகுப்பாளர் விருதும் வழங்கப்படுகிறது.

தமிழ்ப் படமான இரவின் நிழல் படத்தில் வரும் மாயவா சாயவா பாடலுக்காக ஷ்ரேயா கோஷல் சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெறுகிறார்.

சிறந்த நடிகைக்கான தேசிய விருது கங்குபாய் காத்தியாவாடி திரைப்படத்துக்காக ஆலியா பட்டும் மீமீ திரைப்படத்துக்காக க்ரீத்தி சனோனும் பெறுகின்றனர்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை புஷ்பா படத்துக்காக பெறுகிறார் அல்லு அர்ஜுன்.

தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருதை மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷி நடத்த காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பெறுகிறது.

முழுமையான பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான விருது ஆர்.ஆர்.ஆர். படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைப்படத்துக்கான 69-வது தேசிய விருது நடிகர் ஆர். மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட் இந்தி படத்துக்கு வழங்கப்படுகிறது.

2021-ஆம் ஆண்டுக்கான தாதா சாஹிப் பால்கே விருது பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.