எப்படி சாஃப்ட் லேண்டிங் செய்யப் போகிறது சந்திரயான்-3..? டிக்.. டிக்.. டிக்.. பதற்றமான 17 நிமிடங்கள்..!
Published : Aug 23, 2023 6:54 AM
எப்படி சாஃப்ட் லேண்டிங் செய்யப் போகிறது சந்திரயான்-3..? டிக்.. டிக்.. டிக்.. பதற்றமான 17 நிமிடங்கள்..!
Aug 23, 2023 6:54 AM
சந்திரயான்-3 திட்டம் மாலை 6 மணி 4 நிமிடத்துக்கு சாஃப்ட் லேண்டிங் எனப்படும் மென்மையான தரையிறங்கும் செயல் முறையை எப்படி மேற்கொள்ளப் போகிறது என்பதை உலகமே உற்று நோக்கிக் கொண்டு இருக்கிறது. அமெரிக்கா, சீனா, முன்னாள் சோவித் யூனியனுக்குப் பிறகு, இந்த வித்தை அறிந்த 4-வது நாடு என்ற பெருமையைப் பெற இந்தியா காத்திருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை எப்படி தரையிறக்க திட்டமிட்டுள்ளனர் என்பதை இப்போது பார்க்கலாம்.
41 நாள் பயணம்..! படிப்படியான செயல்பாடுகள்..! நிலவின் தென் துருவத்தை நெருங்கிச் சென்று கொண்டிருக்கிறது, சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர். இன்று மாலை 5-45 மணிக்கு தொடங்க இருக்கிறது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பதற்றமான 17 நிமிடங்கள். நிலாவுக்கு மேலே 30 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கக்கூடிய சந்திரயான்-3 விண்கலத்தை நிலாவில் தரையிறக்குவது, அந்த 17 நிமிடங்களில் தான்.
முந்தைய சந்திரயான் 2 திட்டம் தோல்வியை சந்தித்தது, இந்த கட்டத்தில் தான். அப்போது நடந்த தவறுகளை பகுப்பாய்வு செய்து, இந்த முறை மேம்படுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தை அமைத்துள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். அவற்றின் படி, கடைசி 17 நிமிடங்களில் சந்திரயான்-3 படிப்படியாக தரையிறங்கும் செயல்முறையை மேற்கொள்ள உள்ளது.
விண்வெளியில் நிலவை சுற்றி வந்த சந்திரயான்-3, நிலவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போது தான், தென் துருவத்தில் மென்மையாகத் தரையிறங்கும் செயல்முறையை மேற்கொள்ள உள்ளது. அந்த நேரத்தில் சந்திரயானின் இறங்கும் வேகம் மணிக்கு ஆறாயிரம் கிலோ மீட்டராக இருக்கும். அதே வேகத்தில் சென்றால் விண்கலம் நிலவில் மோதி நொருங்கி விடும். எனவே, வேகத்தைக் குறைக்க லேண்டர் எனப்படும் தரையிறங்கியின் 4 கால்களில் பொருத்தப்பட்டுள்ள சிறு ராக்கெட்டுகள் இயக்கப்படும். இதன் மூலம் விண்கலத்திற்கு மேல் நோக்கி தள்ளுவிசை கிடைக்கும். இதன் காரணமாக வேகம் படிப்படியாகக் குறையும். நிலாவிலிருந்து 7.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரும்போது லேண்டரின் வேகம் மணிக்கு ஆயிரத்து 200 கிலோ மீட்டர் என்ற அளவுக்கு குறையும்.
இந்த கட்டம் வரை லேண்டரின் கால்கள் பக்கவாட்டில் திரும்பி இருக்கும். எனவே, தரையிறங்க வசதியாக, லேண்டரின் கால்கள் சுமார் 50 டிகிரி அளவுக்கு கீழ் நோக்கி திருப்பப்படும். இதைத் தொடர்ந்து, நிலவில் இருந்து 7.4 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள லேண்டர் படிப்படியாகக் 6.8 கிலோ மீட்டருக்கு கொண்டு வரப்படும். இதன் பின்னர் லேண்டர் தரையிறங்கும் இடம் முடிவு செய்யப்படும். இப்பணியை லேண்டரில் உள்ள ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு கருவி மேற்கொள்ளும்.
லேண்டர் தரையிறங்க வேண்டிய பகுதி ஏற்கனவே படமெடுத்து பதிவேற்றப்பட்டுள்ளது. லேண்டர் நிலவை நெருங்க நெருங்க எடுத்துக் கொண்டே செல்லும் படங்களை ஏற்கனவே பதிவேற்றப்பட்டுள்ள படங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் செயற்கை நுண்ணறிவு, சரியான பாதையைக் கண்டறிந்து லேண்டரை இயக்கும்.
இதன் பின் ஏற்கனவே பக்கவாட்டில் 50 டிகிரிக்கு திருப்பப்பட்ட லேண்டரின் கால்களை நேராக கீழ்நோக்கி இருக்கும் வகையில் திருப்பப்படும். இந்த கட்டத்தில் இஞ்சினை முன்புறமாக இயக்கி லேண்டர் தரையிறங்கும் வேகம் மேலும் குறைக்கப்படும். ஒரு கட்டத்தில் மணிக்கு ஆயிரத்து 200 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த லேண்டர், நிலவின் மேற்பரப்பில் இருந்து 800 மீட்டர் உயரத்திற்கு வரும்போது அதன் வேகம் பூஜ்ஜியமாகி விடும்.
லேண்டரில் உள்ள ராக்கெட்டின் விசை குறைக்கப்பட்டதும், விண்கலம் மெல்ல நிலவின் மேற்பரப்பில் இருந்து 150 மீட்டர் உயரத்திற்கு வந்து சேரும். அப்போது லேண்டரில் உள்ள ஆபத்தை உணர்ந்து தவிர்க்கும் கேமராக்கள் இயங்கத் துவங்கும். தரையிறங்கும் விண்கலத்தின் 4 கால்களில் ஒன்று, ஏதோ ஒரு பாறை மேல் பட்டாலோ, அல்லது குழிக்குள் சென்றாலோ விண்கலம் சாய்ந்துவிடும். அதே போல, சரிவில் தரையிறங்கினால் கவிழ்ந்து தலைகுப்புற விழும் சூழல் உருவாகக் கூடும். அதுபோன்ற பிரச்சினைகள் இல்லாத இடத்தைக் கண்டறிந்து தரையிறங்க வேண்டும்.
இந்த கட்டத்தில், நிலா தனது ஈர்ப்புவிசையால் லேண்டரை தன்னை நோக்கி இழுக்கும். அதற்கு சரிசமமாக விண்கலத்தின் கால்களில் உள்ள ராக்கெட்டுகள் மேல்நோக்கிய தள்ளுவிசையைக் கொடுக்கும் வகையில் இயங்கப்படும். இதன்மூலம் விண்கலம் கீழேயும் விழாமல் மேலேயும் செல்லாமல் அந்தரத்தில் இருக்கும்.
முந்தைய அனுபவங்களின் அடிப்படையில் இம்முறை விக்ரம் லேண்டரில், லேசர் டாப்லர் வெலாசிமீட்டர் என்ற கருவியை இஸ்ரோ இணைத்துள்ளது. இந்தக் கருவி நிலாவின் தரையை நோக்கி ஒரு லேசர் கற்றையை அனுப்பும். அந்த லேசர் கற்றை திரும்பி மேல்நோக்கி வந்ததும், அதை பயன்படுத்தி, விண்கலம் எவ்வளவு வேகத்தில் கீழ்நோக்கிச் செல்கிறது என்பதை செயற்கை நுண்ணறிவு நொடிக்கு நொடி கணக்கிடும். அதைப் பொருத்து, தேவைப்படும் சரியான வேகத்தில் தரையிறங்கும் வேலையை செயற்கை நுண்ணறிவு மேற்கொள்ளும்.
இந்த சூழலில், லேண்டரின் கீழ்பகுதியில், நிலவின் மேற்பரப்பை பார்த்தபடி பொருத்தப்பட்டிருக்கும் கேமரா தொடர்ச்சியாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டே வரும். இந்த புகைப்படங்களில் நிலவின் தரைப்பரப்பு எவ்வளவு வேகமாகப் பெரிதாகிறது என்பதை அடிப்படையாக வைத்து எவ்வளவு வேகத்தில் விண்கலம் கீழ்நோக்கி வருகிறது என்பது கணக்கிடப்படும். அதிக வேகத்தில் கீழே இறங்கி லேண்டர் விழுவதைத் தடுக்க இந்த கூடுதல் பாதுகாப்பு ஏற்பாட்டை செய்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இவை அனைத்தும் முடியும் போது நிலவின் மேற்பரப்பில் இருந்து வெறும் 10 மீட்டர் உயரத்தில் லேண்டர் இருக்கும். அப்போது, கால்களில் உள்ள ராக்கெட்டுகள் அனைத்தையும் ஆஃப் செய்து விட்டு லேண்டர் நிலவின் மீது விழ வைக்கப்படும். நிலாவின் மேற்பரப்பு முழுவதும் மிகவும் மெல்லிய மண் துகள்கள் நிறைந்துள்ளன. அந்த மேற்பரப்பு வரை ராக்கெட்டை இயக்கிக்கொண்டே இறங்கினால் மண் துகள்கள் புழுதியாக மேலெழும்பி, லேண்டரின் மேற்பரப்பில் உள்ள சூரியத் தகடுகளில் படியும். அதனால் சூரிய ஒளி தடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்ய முடியாத அபாயம் ஏற்படும். அதைத் தவிர்ப்பதற்காகவே லேண்டரை கல் விழுவது போல விழச் செய்ய இஸ்ரோ முடிவு செய்துள்ளது. அவ்வாறு விழும்போது நொடிக்கு 2 மீட்டர் என்ற வேகத்தில் விழ வைக்கவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. தவறுதலாக நொடிக்கு 3 மீட்டர் என்ற வேகத்தில் விழுந்தாலும் கூட அதைத் தாங்கக்கூடிய அளவுக்கு லேண்டரின் கால்களை அமைத்துள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.
லேண்டர் கீழே விழுந்த வேகத்தில் லேசாக தூசு மேலே எழும்பும் என்பதால், அது அடங்கும்வரை எதுவும் செய்யாமல் லேண்டர் அப்படியே காத்திருக்கும். தூசு அடங்கிய பின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் எனப்படும் ஊர்திக்கலன் வெளியே வரும். அவ்வாறு வெளியே வந்ததும் பிரக்யான் விக்ரமை புகைப்படம் எடுக்கும். விக்ரம் பிரக்யான் பதிலுக்கு படம் பிடிக்கும். அந்த புகைப்படங்களின் கண்கொள்ளாக் காட்சியைக் காண இந்தியா மட்டுமின்றி உலகமே ஆர்வத்துடன் காத்திருக்கிறது.