நிலவை படிப்படியாக நெருங்கி வரும் சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், 70 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து எடுத்த புதிய புகைப்படங்களை இஸ்ரோவின் தரைக்கட்டுப்பாடு மையத்திற்கு அனுப்பியுள்ளது.
நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள விண்ணிற்கு அனுப்பப்பட்ட லேண்டரை திட்டமிட்டபடி நாளை மாலை 6.04 மணிக்கு தரையிறக்கும் வகையில், விஞ்ஞானிகள் இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், லேண்டர் எடுத்து அனுப்பிய நிலவினுடைய மேற்பரப்பின் படங்களை வெளியிட்டுள்ள இஸ்ரோ, லேண்டரின் பயணம் சீராக உள்ளதாக தெரிவித்துள்ளது.
நேரடியாக தென்படும் காட்சிகளையும் தன்னிடம் உள்ள வரைபடத்தையும் ஒப்பிட்டு தரையிறங்கும் இடத்தை லேண்டர் பரிசீலித்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
லேண்டரின் செயல்பாடுகள் இயல்பான நிலையில் உள்ளதாகவும், வழக்கமான சோதனைகள் நடந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.