நிலவை ஆய்வு செய்ய ரஷ்யா அனுப்பிய லூனா - 25 விண்கலம் விழுந்து நொறுங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த 11ஆம் தேதியன்று லூனா விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
புவிவட்ட பாதையில் சுற்றாமல், எரிபொருளின் உதவியுடனே உந்தி தள்ளப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் 17ஆம் தேதியன்று அந்த விண்கலம் நுழைந்தது.
நிலவின் மேற்பரப்பில் நாளை அதனை தரையிறக்க ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்கோஸ்மோஸ் திட்டமிட்டிருந்தது. அதன்படி, விண்கலத்தின் சுற்றுப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், நிலவில் தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் விண்கலத்தை செலுத்துவதில் திடீரென தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
அந்த விண்கலம் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்த நிலையில், நேற்றும், இன்றும், இணைப்பை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக ரோஸ்கோஸ்மோஸ் விளக்கமளித்துள்ளது.
பின்னர், கணிக்க முடியாத வகையில் கட்டுப்பாட்டை இழந்து பயணித்த விண்கலம், நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
47 ஆண்டுகளுக்குபின் நிலவை ஆய்வு செய்ய ரஷ்யா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. சந்திரயான் - 3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டால், நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.