மணிப்பூர் கலவரத்தில் இருந்து தப்பி வந்த தமிழகத்தை பூர்வீமாக கொண்ட குடும்பத்தினர் உதவி கோரி தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு கொடுத்த நிலையில், அவர்களுக்கு உதவ சென்னை மாவட்ட நிர்வாகம் முன்வந்துள்ளதாக தெரிகிறது.
ஜோசப் கம் தேங்தாங்ஜு என்பவர் ஏழு வயதாக இருக்கும்போது பெற்றோருடன் மணிப்பூர் சென்று, அங்கேயே வாழ்ந்து சுகுனு என்ற சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன் ரயில் மூலம் சென்னை வந்த ஜோசப் மற்றும் அவரது குடும்பத்தினர் எங்கு செல்வது என தெரியாமல் சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே இரண்டு நாட்கள் தங்கியுள்ளனர்.
செங்குன்றத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர், அவர்களை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வந்து, மனு அளிக்க உதவி செய்துள்ளார்.
அவர்களுக்கு உடனடியாக உதவி செய்ய மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஆட்சியர் அருணா, ஜோசப் குடும்பத்தினரின் கல்வி தகுதி விவரங்களை சேகரித்து வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்வதாக கூறினார்.