கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் பெற்றோருடன் தூங்கியபோது கடத்தப்பட்ட 4 மாதக் குழந்தையை கேரளாவில் மீட்ட போலீசார், குழந்தையை கடத்திய தம்பதியை கைது செய்தனர்.
முத்துராஜா - ஜோதிகா தம்பதியின் குழந்தை கடந்த 23ஆம் தேதி கடத்தப்பட்ட நிலையில், இது தொடர்பாக அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போது குழந்தையை பெண் ஒருவர் கடத்தி சென்றது தெரிய வந்தது.
போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து குழந்தையை கடத்திய பெண்ணை தேடிய நிலையில் கோட்டார் ரயில் நிலையத்திலிருந்து அவர்கள் ரயில் மூலம் கேரளா சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் கேரள காவல்துறை உதவியுடன் சிறையின்கீழ் என்ற இடத்தில் ரயில் நிலையத்தில் ஒரு தம்பதி குழந்தையுடன் பிச்சை எடுப்பதை அறிந்து விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்த குழந்தையை மீட்டனர்.
வட்டக்கோட்டையைச் சேர்ந்த நாராயணன்-சாந்தி தம்பதியை கைது செய்து கன்னியாகுமரிக்கு அழைத்து வந்த போலீசார், குழந்தையை தாய் ஜோதிகாவிடம் ஒப்படைத்தனர். குழந்தையை வைத்து பிச்சை எடுக்கும் நோக்கத்தில் கடத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண்பிரசாத் செய்தியாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.