தெலங்கானாவில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக லட்சுமிதேவிபேட்டையில் 65 சென்டி மீட்டர் மழை கொட்டித்தீர்த்துள்ளது.
முலுகு மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் மீது பாய்ந்தோடும் வெள்ளத்தால் மக்கள் பாலத்தை கடக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வாரங்கல் அருகே முல்கலப்பள்ளி பகுதியில், கோதாவரி ஆற்றின் கிளை ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு ஆற்று பாலத்தை தொழிலாளர்கள் கடந்தபோது, கூட்டத்தில் இருந்த பெண்மணி ஒருவர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
முலுகுவில் கனமழை காரணமாக முத்யாலா தாரா நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்ட 80 சுற்றுலாப் பயணிகளையும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திராக மீட்டனர். இதனிடையே பத்ராசலத்தில் கோதாவரி ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டியதால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.