வேளாங்கண்ணியில் கடன் தொல்லையால் அவதிப்பட்ட வெல்டிங் பட்டறை உரிமையாளர், பொதுக்கழிவறைக்குள் வைத்து கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
புதன்கிழமை காலை பொதுக்கழிவறைக்குள் சென்ற ஒருவர் நீண்ட நேரமாக வெளியே வராததை அடுத்து அங்கிருந்தவர்கள் போலீசுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்தபோது ஒருவர் கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் அவர், கோவையைச் சேர்ந்த மொஹைதீன் என்பதும் வெல்டிங் பட்டறை உரிமையாளர் என்பதும் தெரியவந்தது. மொஹைதீன் தனது தொழில் நிமித்தமாகவும் மகளின் திருமணத்துக்காகவும் வாங்கிய கடன்களுக்கு வட்டி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
மன உளைச்சலில் இருந்த அவர் வெளியூர் செல்வதாகக் கூறிவிட்டு வேளாங்கண்ணி வந்து ஓரிரு நாட்கள் சுற்றித் திரிந்துள்ளார். தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த அவர், தனது 6 வயது பேத்தி மீது கொண்ட பாசம் காரணமாக கழிவறை சுவற்றில் 'இக்லு ஐ லவ் யூ ' என்று எழுதி வைத்திருந்திருந்தது தெரியவந்தது.