இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட டிஆர்டிஓ விஞ்ஞானி பிரதீப் குருல்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புனேவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வகத்தின் இயக்குநராக இருந்த குருல்கருக்கு, ஜாரா தாஸ் குப்தா என்ற வேற்றுப் பெயர் கொண்ட பாகிஸ்தானியரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரிடம், இந்திய ஏவுகணைகள் குறித்து தகவல் தெரிவித்ததாக குருல்கர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், குருல்கர் வாட்ஸ் அப், குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலமாக ராணுவ ரகசியங்களை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரமோஸ், ட்ரோன்கள், அக்னி ஏவுகணை குறித்த தகவல்களை வழங்கியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. குருல்கர் தற்போது புனேவில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.