உயிர்களைப் பலிகொண்ட மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்..!
Published : Jul 09, 2023 9:01 AM
மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் வன்முறையில் ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்தனர். மோதல் சம்பவங்களில் திரிணாமூல், பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த பலர் காயமடைந்தனர்.
மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அம்மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மோதல் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. வன்முறை தலைவிரித்தாடியதால் பாதுகாப்புக்கு துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று வாக்குப்பதிவு தொடங்கிய உடன் மீண்டும் வன்முறை தலைதூக்கியது. கூச்பெகாரின் சித்தாய் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிக்குள் புகுந்த மர்ம நபர்கள், வாக்குச்சீட்டுகளுக்கு தீ வைத்தனர். தின்ஹாட்டா பகுதியில் இருந்த சாவடியில், வாக்குப் பெட்டிகளில் தண்ணீர் ஊற்றப்பட்டதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வன்முறைச் சம்பவங்களில் பலர் காயமடைந்ததால், பதற்றமான நிலை காணப்பட்டது.
ஆளும் திரிணாமூல் காங்கிரசும் பாஜகவும் வன்முறைக்கு ஒன்றையொன்று குற்றம் சாட்டின. நேற்று ஒரேநாளில் வன்முறைச் சம்பவங்களில் திரிணாமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் 18 பேர் உயிரிழந்தனர். வன்முறையில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனிடையே பூத் அபகரிப்பு புகார்கள் குறித்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.