கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையார் மலை கிராமங்களுக்கு செல்லும் சாலை 19 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கோதையார் பவர் ஹவுஸிற்காக அமைக்கப்பட்ட இந்த சாலை யாருக்கு சொந்தம் என்று வனத் துறைக்கும், மின்சாரத் துறையினருக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை சீரமைக்கக் கோரி பல கட்டங்களாக போராட்டங்களை நடத்தியும் பலனில்லை என்று அப்பகுதி மக்கள் கூறினர்.
இருபதிற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லக் கூடிய இந்த தடத்தில் தினசரி ஏழு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மோசமான நிலையில் உள்ள இச்சாலையில் பேருந்துகளை இயக்க சிரமமாக இருப்பதாக, கடந்த திங்கள் கிழமை ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நின்று விடுவதால் பள்ளிக்குச் செல்வதில் சிரமம் இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.