சென்னையில், பணிக்கு தாமதமாக வந்த பெண் ஊழியரை கண்டித்த தபால்துறை அதிகாரியை அடியாட்களை வைத்து வெட்டியதாக கணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவொற்றியூர் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வரும் அசோகன் என்பவரை, கடந்த 27ம் தேதி மணலி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது காரில் வந்த கும்பல் வழிமறித்து வெட்டி விட்டு தப்பியோடியது.
அந்த கும்பல் வந்த காரின் நம்பர் பிளேட் மாற்றப்பட்டு மீஞ்சூர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததை கண்டுபிடித்த சாத்தாங்காடு போலீசார், கார் உரிமையாளரிடம் விசாரித்தனர்.
அப்போது, காரை மீஞ்சூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதாகர் வாங்கிச் சென்றதாக தெரிவித்தைத் தொடர்ந்து அவரிடம் விசாரித்தனர்.
அதில், திருவொற்றியூர் தபால் நிலையத்தில் வேலை பார்த்து வரும் தனது மனைவி சுகன்யாவை அசோகன் அடிக்கடி கண்டித்து வந்ததால் தாக்குதல் நடத்தியதாக சுதாகர் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து சுதாகரையும் அவரது கூட்டாளி செந்தில் குமாரையும் கைது செய்த போலீஸார், தலைமறைவான மேலும் சிலரை தேடி வருகின்றனர்.