இன்றைய காலக்கட்டத்தில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவின் வாரங்கலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பழைய உள்கட்டமைப்புகளை வைத்துக் கொண்டு நாட்டில் விரைவான வளர்ச்சியை எட்ட முடியாது என்றார். பல்வேறு துறைகளில் முன்னெப்போதும் இல்லாததை விட துரிதமாகவும் பெரிய அளவிலும் வளர்ச்சிப் பணிளை அரசு மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
9 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரம் கோடியாக இருந்த நாட்டின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி, தற்போது 16 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
முன்னதாக, வாரங்கலில் உள்ள பத்ரகாளி கோயிலில் வழிபாடு செய்த பிரதமர் மோடி, பசுக்களுக்கு தீவனம் வழங்கினார்.
பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் சந்திர சேகர ராவ் பங்கேற்க வில்லை.