கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே அரசு மணல் குவாரியில் மணல் வாங்குவது போல் சென்று திருட்டுத்தனமாக மணல் அள்ளிச் செல்லும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் வெள்ளாற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு லாரிகளிலும் மாட்டு வண்டிகளிலும் சென்று மக்கள் மணல் வாங்கிச் செல்வது வழக்கம்.
முறையாக அனுமதி பெற்று மணல் ஏற்றும் மாட்டு வண்டிகளுடன் கூட்டத்தோடு கூட்டமாக தங்களது வண்டிகளையும் ஓட்டிச் செல்லும் மணல் திருடர்கள், வேறு இடத்தில் மணலை அள்ளிக் கொண்டு, குவாரியிலிருந்து வரும் வண்டிகளோடு இணைந்து, யாருக்கும் தெரியாமல் கடத்துவதாக கூறப்படுகிறது.
அவ்வாறு திருடிச் செல்லும் மணலை ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனை செய்வதாகவும் ஊர் மக்கள் கூறுகின்றனர். அரசு குவாரிக்குச் செல்லும் மாட்டு வண்டிகளை விட, திருட்டு மணல் அள்ளுவதற்காகச் செல்லும் மாட்டு வண்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் இதை உடனடியாக தடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.