களத்தில் குதித்தது கூட்டுறவுத்துறை.. ஒரு க்ளிக் செய்தால் வீட்டிற்கே வரும் மளிகைப் பொருள்.. களத்தில் டஃப் கொடுக்குமா Co-OP BAZAAR...?
Published : Jul 07, 2023 6:35 AM
களத்தில் குதித்தது கூட்டுறவுத்துறை.. ஒரு க்ளிக் செய்தால் வீட்டிற்கே வரும் மளிகைப் பொருள்.. களத்தில் டஃப் கொடுக்குமா Co-OP BAZAAR...?
Jul 07, 2023 6:35 AM
ஆர்டர் செய்தால் 64 வகையான மளிகைப் பொருட்களை வீடு தேடி வந்து டெலிவரி செய்யும் வசதியை தமிழக கூட்டுறவுத்துறை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக கூட்டுறவு சந்தை என்ற பெயரில் மொபைல் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
மொபைல் போனில் ஒரு க்ளிக் செய்தாலே உணவு, மளிகை, மருந்து மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவைகள் வீட்டின் கதவைத் தட்டி வந்து சேருகின்றன. தனியார்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த களத்தில், தமிழக கூட்டுறவுத் துறையும் தற்போது குதித்துள்ளது.
மசாலா பொடி வகைகள், எண்ணெய், பருப்பு வகைகள், உயிரி உரங்கள் என 64 வகையான பொருட்கள் ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் வகையிலான "கூட்டுறவு சந்தை" எனப்படும் Co-OP BAZAAR செயலியை சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன்.
திருச்செங்கோடு, ஈரோடு, பெருந்துறை, சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, காஞ்சிபுரம், கொல்லிமலை, சத்தியமங்கலம் ஆகிய 8 கூட்டுறவு சங்கங்கள் மூலம் தயாரிக்கப்படும் 64 வகையான பொருட்கள் இந்த செயலியில் சந்தைப்படுத்தப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள் நிர்ணயம் செய்துள்ள விலையை விட கூட்டுறவுத் துறை செயலியில் குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, தனியார் நிறுவனங்களில் ஒரு லிட்டர் கடலை எண்ணெய் 270 முதல் 300 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படும் நிலையில் தாங்களோ 240 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக தெரிவித்தனர் கூட்டுறவுத்துறை அதிகாரிகள்.
தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தும் ஆர்டர் செய்யும் வகையில் இந்த Co-OP BAZAAR செயலி உருவாக்கப்பட்டுள்ளது. எந்த பகுதிக்கு டெலிவரி செய்ய வேண்டுமோ அதற்கு அருகாமையில் உள்ள பல்வேறு வகையான கூட்டுறவு விற்பனை நிலையங்களிலிருந்து பொருட்கள் விநியோகம் செய்யப்படும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொருட்களின் விலை குறைவு தான், ஆனால் டெலிவரி சார்ஜ் அதிகமாக உள்ளதே என்ற கேள்விக்கு கூட்டுறவுத்துறை செயலாளர் ஜெகநாதன் விளக்கம் அளித்தார்.
படிப்படியாக பொருட்களின் எண்ணிக்கையும் அவற்றை விநியோகிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க உள்ளதாகவும் மக்கள் இந்த செயலியை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் கூட்டுறவுத் துறை அமைச்சர்.