மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வரும் போதிலும், பதற்றத்தை தணிக்கும் வகையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
அந்த மாநிலத்தில் கூக்கி, மெய்த்தி சமூக மக்களிடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். வன்முறையால் மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன.
இந்நிலையில், ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் சில தினங்களுக்கு முன்னர் முதலமைச்சர் பைரன் சிங் ஆலோசனை நடத்தினார்.
அதில் பள்ளிகளை திறக்கவும், வன்முறை குழுக்கள் உருவாக்கியுள்ள பதுங்கு குழிகளை அழிக்கவும், விவசாயத்தை சீரான முறையில் நடத்த விவசாயிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் வருகை குறைவாக இருந்த போதிலும், மாநில அரசின் பள்ளி திறப்பு முடிவுக்கு ஆசிரியர்களும், பெற்றோர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.