ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே 2கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 கிலோ கடத்தல் தங்கம் படகுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக தங்கக்கட்டிகள் மர்மப் படகில் கடத்தி வரப்படுவதாக மண்டபம் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் படகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான பதிவு எண் இல்லாத பைபர் படகை கண்ட அதிகாரிகள் பிடிக்க முயன்ற போது அதில் இருந்த 2பேர் விரைவாக புறப்பட்டு நொச்சியூரணி கடற்கரை அருகே உள்ள பவளப்பாறை மீது மோதி விட்டு தப்பிச் சென்றனர்.
பின்னர் அந்த படகை கைப்பற்றிய அதிகாரிகள் சோதனை செய்த போது சுமார் 5 கிலோ 27 கிராம் தங்கக்கட்டி இருந்ததாக கூறப்படுகிறது.