அமெரிக்காவில் வாஷிங்டன் நகருக்கு மேலே, வானில் அதிக சத்தத்துடன் பறந்த போர் விமானங்களால் மக்கள் பரபரப்படைந்தனர்.
ஞாயிறுக்கிழமை பிற்பகலில் செஸ்னா 560 சிட்டாசன் வி என்ற இரண்டு என்ஜின்கள் கொண்ட விமானம் தடைசெய்யப்பட்ட வான் வெளியில் பறந்து கொண்டிருந்தது.
அந்த விமானத்தில் இருந்து எந்தவொரு பதிலும் கிடைக்காததால், அமெரிக்க போர் விமானங்கள் மின்னல் வேகத்தில் துரத்தின. போர் விமானங்கள் செல்லும்போது எச்சரிக்கை ஒலியும் எழுப்பப்பட்டதால், அந்நகர மக்கள் பதற்றம் அடைந்தனர்.
வாஷிங்டன் வான் எல்லையில் இருந்து விலகிய அந்த விமானம், விர்ஜினியா மாகாணத்திலுள்ள மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் நான்கு பேர் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் உயிர்பிழைத்தவர்கள் பற்றி தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
அமெரிக்காவில், கடந்த 2001ம் ஆண்டு இரட்டை கோபுரங்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு, தனிநபர் விமானங்கள் பறப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.