கோடை வெப்பம் காரணமாக தமிழ்நாட்டில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கத்திரி வெயில் முடிந்த பிறகும் கோடை வெப்பம் தகித்து வருகிறது. ஞாயிறன்று மட்டும் வெயில் 18 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. மாணவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, ஏற்கனவே முடிவு செய்த 7ஆம் தேதிக்கு பதில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டுமென என பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.
இதனை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதனை அடுத்து, 6 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 12ஆம் தேதியும், ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் என்.ரங்கசாமி அறிவித்துள்ளார்.