பெரம்பலூர் அருகே ஏற்கனவே விபத்துக்குள்ளான வாகனங்களின்மீது ஆம்னி பேருந்து அடுத்தடுத்து மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவு என்ற இடத்தில், விழுப்புரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற டிராக்டர் ஒன்றும் திருவண்ணாமலையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற வேனும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயன்ற போது மோதிக் கொண்டன. இதில் டிராக்டர் சாலை நடுவே தலைக்குப்புற கவிழ்ந்தது. வேன் சாலையின் நடுவே தடுப்புச் சுவரில் மோதி நின்றது.
விபத்தில் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜேந்திரன் உள்ளிட்ட மருத்துவ உதவியாளர்கள் ஸ்ட்ரெச்சரில் மீட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த ஆம்னி பேருந்து, ஏற்கனவே விபத்துக்குள்ளாகி இருந்த வாகனங்கள் மீது அதிவேகமாக மோதியது.
இதில் ஆம்புலன்ஸ் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரைத் தாண்டி, எதிர் திசையில் சாலையோர பள்ளத்திற்குள் விழுந்தது.
இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜேந்திரன் மற்றும் மீட்பு பணியை வேடிக்கை பார்த்த 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். ஆம்னி பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.