தேனி மாவட்டத்தில் சுமார் ஒரு வாரமாக குடியிருப்புப் பகுதிகளை ஒட்டி சுற்றித் திரிந்த காட்டுயானை அரிசிக் கொம்பன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
கேரளாவில் பலரை கொன்ற அரிசிக் கொம்பனை அம்மாநில வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டிருந்தனர். அந்த யானை அங்கும் இங்கும் சுற்றித் திந்து கடந்த மாதம் 26 ஆம் தேதி தேனி மாவட்டத்திற்குள் நுழைந்தது. குடியிருப்புப் பகுதிகளில் யானை நடமாடியதால் கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது.
சண்முகாநதி அணையை ஒட்டிய வனப்பகுதிக்குள் யானை முகாட்டிருந்த நிலையில் அரிசிக் கொம்பனின் கழுத்தில் ஏற்கனவே மாட்டியிருந்த ரேடார் கருவி மூலமாக வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
அதிகாலை நேரத்தில், சின்னஓவுலாபுரம் பெருமாள் கோவில் வனப்பகுதிக்குள் யானை நுழைந்தது தெரியவந்ததை அடுத்து, வனத்துறையில் குறிபார்த்து சுடும் நிபுணர்கள் துரிதமாக செயல்பட்டு மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்தனர்.
பிரத்யேகமான லாரியில் அரிசிக்கொம்பனை ஏற்றிய வனத்துறையினர், முண்டந்துரை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றிருப்பதாக தெரிகிறது. யானை பிடிபட்டதைத் தொடர்ந்து, கம்பம், கூடலூர் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுவதாக தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.