​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
275 பேரை பலி கொண்ட கோர விபத்துக்கான காரணம் கண்டுபிடிப்பு..!

Published : Jun 04, 2023 5:48 PM



275 பேரை பலி கொண்ட கோர விபத்துக்கான காரணம் கண்டுபிடிப்பு..!

Jun 04, 2023 5:48 PM

275 பேரை பலி கொண்ட ஒடிசா ரயில் விபத்துக்கு எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் எனப்படும் சிக்னலுக்கான மின்னணு அமைப்பில் மாற்றம் ஏற்பட்டதே காரணம் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பஹாநகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் பஹாநகா பஜார் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது கோரமண்டல் விரைவு ரயில் மோதியது. இதில் கோரமண்டல் ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன. அந்த பெட்டிகள், சரக்கு ரயில் மீதும், அருகே இருந்த மற்றொரு தண்டவாளத்திலும் சிதறி விழுந்தன. அப்போது ரயில் பெட்டிகள் சிதறி விழுந்து கிடந்த தண்டவாளத்தில் நுழைந்த பெங்களூரு-ஹவுரா விரைவு ரயில், அந்த பெட்டிகள் மீது மோதியது. 2 பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில் என 3 ரயில்களின் 21 பெட்டிகள் தடம் புரண்டன.

கோரமண்டல் ரயில், பஹாநகா பஜார் ரயில் நிலையத்தை அடைவதற்கு சற்று முன்பாக மெயின் லைனிலிருந்து திடீரென லேன் மாற்றப்பட்டு சரக்கு ரயில் நின்றுகொண்டிருந்த லூப் லைனில் நுழைந்ததே மொத்த விபத்துக்கும் காரணமாக அமைந்தது.

இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த ஆயிரத்து 175 பேரில் 793 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரில் 100 பேரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஒடிசா ரயில் விபத்து மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநில மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர் என சுமார் ஆயிரத்து 200 பேர் ஈடுபட்டனர். இதன் காரணமாக மிகக்பெரிய விபத்து நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் பயணிகளை மீட்கும் நடவடிக்கைகள் முழுவதும் முடிக்கப்பட்டன. தற்போது ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து அகற்றப்பட்டு, ரயில் பாதைகள் சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

நூற்றுக்கணக்கானோரை பலி வாங்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் குறித்து அறிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், விபத்து நேரிட்ட இடத்தில் இரண்டாம் நாளாக ஆய்வு மேற்கொண்ட ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு சீரமைப்பு பணிகளின் நிலை பற்றி கேட்டறிந்தார். எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் எனப்படும் சிக்னலுக்கான மின்னணு அமைப்பில் மாற்றம் ஏற்பட்டதே ரயில் விபத்துக்குக் காரணம் என்று அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்தார்.

ரயில் பாதையில் மாற்று வழித்தடத்துக்காக ஒரு தண்டவாளத்தை மற்றொரு தண்டவாளத்துடன் இணைப்பதற்கான பணியை செய்ய மின்னணு இன்டர்லாக் பயன்படுத்தப்படுகிறது. முன்பு மனித ஆற்றல் மூலம் செய்யப்பட்டு வந்த இப்பணி, தற்போது தானியங்கி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நவீன தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே விபத்து நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.