ஜப்பானில் உள்ள கோமாட்சு நிறுவன உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
கட்டுமானம் மற்றும் சுரங்க உபகரணங்கள் தயாரிப்புத் துறையில் உள்ள அந்நிறுவனம், வாகன தளவாடங்கள், மின்னணுவியல் போன்ற பிற வணிகங்களிலும் ஈடுபட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கோமாட்சு இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரகடம் சிப்காட்டில் ஹைட்ராலிக் அகழ்வாராய்வு இயந்திரம் போன்றவற்றை தயாரித்து வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஒசாகாவில் உள்ள அந்நிறுவன ஆலையை பார்வையிட்ட முதலமைச்சர், அதன் செயல்பாடுகளை பார்வையிட்டு, உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின்போது, சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்த முதலமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள கோமாட்சு ஆலையை விரிவாக்கம் செய்திடுமாறு கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து ஒசாகா மாகாணத்தின் துணை ஆளுநர் நோபுஹிகோ யமாகுஜி அழைப்பின் பேரில் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒசாகா கோட்டையை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். அங்கு ஜப்பானிய குழந்தைகளுடன் அவர் அளவளாவினார்.