​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து கொன்ற எஸ்.ஐ மகள்.! முதல்வரின் களஆய்வுக்கு பயந்து கைது செய்த போலீசார்.!

Published : May 25, 2023 6:28 AM



முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து கொன்ற எஸ்.ஐ மகள்.! முதல்வரின் களஆய்வுக்கு பயந்து கைது செய்த போலீசார்.!

May 25, 2023 6:28 AM

தனது திருமணத்தை மீறிய உறவை மறைக்க, மாமனார், மாமியார், பக்கத்துவீட்டு சிறுவனை முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து கொன்ற எஸ்.ஐ மகள், தந்தையின் செல்வாக்கால் ஒன்றரை ஆண்டுகாலம் தப்பித்த நிலையில், வேறு வழியே இன்றி தற்போது கைது செய்யப்பட்ட சுவாரஸ்ய பின்னணி குறித்து விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு..

தந்தை எஸ்.ஐ என்பதால், 2021ல் 3 பேரை விஷம் வைத்து கொன்றுவிட்டு காவல்துறையின் அதிகாரத்தை பயன்படுத்தி சுதந்திரமாக உலா வந்த நிலையில், காதலரோடு கமுக்கமாக கைது செய்யப்பட்டிருக்கும் கீதா இவர் தான்

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த இலங்கியனூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் - கொளஞ்சியம்மாள் தம்பதியர் மற்றும் பக்கத்து வீட்டுச்சிறுவன் ஆகியோர், கடந்தாண்டு ஜனவரி மாதம் அடுத்தடுத்து உயிரிழக்க, மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துள்ளனர்.

அவர்களின் விசாரணையில், சம்பவ நாளான 2021ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி இரவு, பெரியவர் சுப்பிரமணியனின் மகன் வேல்முருகனின் மனைவி கீதா, தனது மாமனார், மாமியார் ஆகியோருக்கு முள்ளங்கி சாம்பாருடன், இரவு உணவு பரிமாறியுள்ளார். அப்போது, அங்கு வந்த பக்கத்துவீட்டுச் சிறுவனுக்கு இரவு உணவு பரிமாறப்பட்டுள்ளது.

விடிவதற்குள், மூவரின் உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டதால், இருவேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், பெரியவர் சுப்பிரமணியன் ஜனவரி 4ஆம் தேதியும், அவரது மனைவி கொளஞ்சியம்மாள் 5ஆம் தேதியும், உயிருக்குப் போராடிய சிறுவன் நித்திஷ்வரன் ஜனவரி 12ஆம் தேதியும் உயிரிழந்தனர்.

இவர்களின் உடற்கூராய்வின் அறிக்கையில், மூவரும், விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் தான் உயிரிழந்துள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதை பார்த்த உடன், சம்பவ நாளின் இரவு உணவினை தயாரித்த கீதாவை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தனர்.

போலீசாரின் விசாரணையில், கணவர் வேல்முருகன் வெளிநாட்டில் வேலைசெய்த நிலையில், புதுக்குப்பம் ஹரிஹரனுடன் திருமணத்தை மீறிய உறவு பாராட்டிய கீதா, தனது பழக்கவழக்கத்திற்கு இடைஞ்சலாக இருந்த மாமனார், மாமியாரை தீர்த்துக்கட்ட எண்ணி, முள்ளங்கி சாம்பாரில், காதலர் வாங்கிகொடுத்த எலிபேஸ்டை கலந்துவிட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.

மாமனாரும், மாமியாரும் சாப்பிடும்போது, அங்கு வந்த பக்கத்து வீட்டுச் சிறுவனுக்கு உணவு பரிமாற, இருவரும் கூறியதால், வேறு வழியே இன்றி, அவனுக்கு விஷம் கலந்த முள்ளங்கி சாம்பாருடன் உணவு பரிமாறியதாக கீதா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். தமது பிள்ளைகள் இருவரும் வெளியே விளையாட சென்று விட்டதால் உயிர் தப்பியதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார்.

இவ்வளவு தூரம் வாக்குமூலம் அளித்த பின்னரும், சாப்பாட்டில் விஷம் வைத்த கீதாவையும், அவரது காதலரையும் கைது செய்யாமல், மங்கலம்பேட்டை காவல்நிலைய போலீசார் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதுபற்றி, தாயையும், தந்தையும் இழந்து, 2 பிள்ளைகளோடு, தவித்த வேல்முருகன் பலமுறை முறையிட்டும், வழக்கை விசாரித்து வருவதாக சாக்குப்போக்கு கூறியுள்ளனர் போலீசார்.

சம்பவம் நடைபெற்ற போது வேப்பூர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய கீதாவின் தந்தை பூமாலை, தனது போலீஸ் செல்வாக்கை பயன்படுத்தி, மகளை காப்பாற்றி வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டகளில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சரது உத்தரவின்படி, ஒராண்டு காலமாக நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகள் தூசி தட்டப்பட்டன.

கடலூர் மாவட்ட எஸ்.பி.க்கு அறிக்கை அளிக்க வேண்டும், துறை நடவடிக்கை பாயும் என்பதற்கு அஞ்சிய மங்கலம்பேட்டை போலீசார், வேறு வழியே இன்றி, ஒன்றரை ஆண்டுகால தாமதத்திற்கு பிறகு, எஸ்.ஐ மகள் கீதாவையும், அவரது காதலர் ஹரிஹரனையும் கைது செய்து, போஸ் கொடுத்துள்ளனர்.