சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு முறைப்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர், கோட், சூட், டை அணிந்து தொழில் முதலீடுகள் தொடர்பாக பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து வருகிறார்.
கேப்பிட்டா லேண்ட், டமாசெக், செம்ப்கார்ப் ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை சந்தித்த முதலமைச்சர், சாதக சூழலை எடுத்துரைத்து தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்திடவும், சென்னையில் அடுத்தாண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில் பூங்காக்கள் மற்றும் தளவாடங்கள் ஆகியவற்றில் தற்போதுள்ள முதலீடுகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தொழில் நிறுவனங்களுடன் ஆராய்ந்ததாக முதலமைச்சர் ட்வீட் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு - சிங்கப்பூர் இடையேயான வரலாற்று மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் உறவை மேலும் வலுப்படுத்துவதை எதிர்நோக்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.