​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலையோரம் வீசப்பட்ட வெங்காய மூட்டைகள்... அள்ளிச்சென்ற மக்கள்..! போட்டிபோட்டுத் தூக்கிய காட்சிகள்

Published : May 23, 2023 6:46 AM



சாலையோரம் வீசப்பட்ட வெங்காய மூட்டைகள்... அள்ளிச்சென்ற மக்கள்..! போட்டிபோட்டுத் தூக்கிய காட்சிகள்

May 23, 2023 6:46 AM

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெல்லாரி வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததால், விற்பனைக்கு கொண்டு வந்த வெங்காய மூட்டைகளுக்கு இறக்கு கூலி கூடக் கொடுக்க இயலாத நிலையில், சென்னை வெளிவட்ட சாலையில் வெங்காய மூட்டைகளை கொட்டிச்சென்ற நிகழ்வு அரங்கேறி உள்ளது.

ஒரு பக்கம் தலையில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு... டிப்டாப்பா டிரஸ் போட்டவர்கள், வெங்காய மூட்டையை தடுப்பு கம்பிகளை தாண்டி தூக்கிச்செல்லும் சிலர் ....

அப்படியே கொஞ்சம் அந்தப்பக்கம் பாருங்க... ஒரு லாரி வெங்காய மூட்டைகள்... அப்படியே சாலையோரம் கிடக்குது.. சும்மா விடுமா நம்ம ஊரு சனம்...? அதான் தனக்கு ரெண்டு... தங்கச்சி வீட்டுக்கு ரெண்டுன்னு போட்டி போட்டு தூக்கிச்செல்கின்றனர்

இந்தக்காட்சிகள் அரங்கேறிய இடம் மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் உள்ள குன்றத்தூர் சர்வீஸ் சாலையோரம் லாரியில் இருந்து கொட்டப்பட்ட வெங்காய மூட்டைகளை அந்தவழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை நிறுத்தி தூக்க இயலாமல் தூக்கிச்சென்றனர்

மூட்டை ஒவ்வொன்றும் 50 கிலோ என்பதால் தொழிலாளர்களை தவிர மற்ற எவராலும் அவ்வளவு எளிதாக தூக்க இயலவில்லை. 50 கிலோ வெங்காயத்தை எடுத்துச்சென்று இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் ? என்ற கேள்வியுடன் சிலர் வேடிக்கை பார்த்தபடி நின்றனர்

சிலர் தங்கள் வண்டியில் எத்தனை மூட்டைகள் பிடிக்குமோ அந்தனை மூட்டைகளையும் அள்ளிச்செல்ல ஆயத்தமாக இருந்தனர் இதனால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இது தொடர்பாக விசாரித்த போது கடந்த வாரம் வரை 50 கிலோ எடை கொண்ட பெல்லாரி வெங்காய மூட்டை ஒன்றின் விலை 1000 ரூபாய்க்கு விற்பனையானதாகவும், விலை உயரும் என்ற எதிர்பார்த்த நிலையில் வரத்து அதிகரிப்பால் விலை அதலபாதாளத்துக்கு சென்றதாகவும், இன்று 50 கிலோ மூட்டை 300 ரூபாயாக குறைந்த நிலையில் வண்டி வாடகைக்கு கூட தாங்கள் ஏற்றி வந்த வெங்காயம் விலை போகாத நிலையில் கூடுதலாக இறக்கு கூலி கொடுத்து காத்திருப்பதற்கு பதில் அதனை சாலையில் கொட்டிச்சென்றிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.