விஷச்சாராய விவகாரம் தொடர்பாக அதிமுகவினர் ஆயிரக்கணக்கானோருடன் பேரணியாக சென்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் மனு அளித்தார். இதையொட்டி சென்னை சின்னமலையில் திரண்ட அ.தி.மு.க.வினர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர்.
ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியிடம் எடப்பாடி பழனிசாமி புகார் மனுக்களை அளித்தார். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அப்போது உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கள்ளச்சாராயமும், போலி மதுவும் அரசுக்குத் தெரிந்தே விற்கப்படுவதாகவும், சாராய விவகாரத்தில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படாததால் உயிரிழப்புகள் தொடர்வதாகவும் கூறினார்.
இதனிடையே, பேரணியால் கத்திப்பாரா, கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நெரிசல் நிலவியது.