​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கூகுள் குட்டிச்சாத்தானால் காட்டுக்குள் சிக்கிய அருவிப் பிரியர்கள்..!

Published : May 19, 2023 12:29 PM



கூகுள் குட்டிச்சாத்தானால் காட்டுக்குள் சிக்கிய அருவிப் பிரியர்கள்..!

May 19, 2023 12:29 PM

கூகுள் மேப் பார்த்து புதிய அருவியை தேடிச்சென்றவர்கள், காட்டுக்குள் வழி தவறிச்சென்று சிக்கிக் கொண்டனர். அப்போது அந்த குழுவில் ஒருவர் பாறையில் இருந்து 30 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே மலையிஞ்சி பகுதியில் வனத்திற்குள் அமைந்துள்ள கிழார்குன்று நீர்வீழ்ச்சியை காண கூகுள் மேப் உதவியுடன் சென்றவர்கள் தான் திக்கு தெரியாமல் திகைத்து நின்றவர்கள்

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் போர்டு கொச்சியைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட சுற்றுலா பயணிகள் குழு தொடுபுழா அருகே மலையிஞ்சி பகுதியில் வனத்திற்குள் உள்ள கிழார் குன்று நீர்வீழ்ச்சியை காணச் சென்றனர்.

மலையிஞ்சி பகுதி வரை வாகனம் செல்லும் என்பதால், அங்கிருந்து வனத்தினுள் கூகுள் மேப் உதவியுடன் நீர்வீழ்ச்சியை நோக்கி நடந்து சென்றனர். கூகுள் மேப் காட்டிய தவறான தகவலால் எதிர் திசையில் 4 கி.மீ., தூரம் அடர்ந்த வனத்தினுள் சென்றவர்கள் யானைகள் நடமாடும் பகுதியில் சிக்கி திரும்ப இயலாமல் தவித்தனர்.

இந்நிலையில் அக்குழுவைச் சேர்ந்த ஜிஜூ ஜேம்ஸ் என்பவர் எதிர்பாராத வகையில் பாறையில் இருந்து 30 அடி பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தார். அவரால் எழுந்து நடக்க இயலவில்லை. அவரை எப்படி மீட்பது என்று தவித்த குழுவினர் திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.

அங்கிருந்து கரிமண்ணூர் போலீசாருக்கு அளித்த தகவலின்படி எஸ்.ஐ. பிஜூ ஜேக்கப் தலைமையில் போலீசார் வெகு நேரம் போராடி அந்த வனத்திற்குள் அவர்கள் சிக்கித்தவித்த இடத்திற்குச் சென்றனர்.

தொடுபுழா தீயணைப்பு துறை, வனத்துறை உதவியுடன் கால் முறிந்து அவதிப்பட்ட ஜிஜூ ஜேம்ஸ்சை மீட்டு முதல்கோடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கோடையை கொண்டாட புதிது புதிதாக நீர் வீழ்ச்சியை நாடிச்செல்லும் அருவி பிரியர்கள் முன் பின் தெரியாத காட்டுப்பகுதிக்குள் கூகுளை மட்டுமே நம்பிச்சென்றால் என்ன மாதிரியான சம்பவம் காத்திருக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் மற்றும் ஒரு உதாரணம்.