​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சித்தராமையா

Published : May 18, 2023 10:08 PM

ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சித்தராமையா

May 18, 2023 10:08 PM

சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சித்தராமையா, பெங்களூருவில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதையடுத்து, ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். பெங்களூருவில் ஸ்ரீ கன்டீரவா மைதானத்தில் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக, 3 நாட்கள் இழுபறிக்குப் பின் சித்தராமையாவை முதலமைச்சராக தேர்வு செய்து காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.

இதை டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால் மற்றும் ரந்தீப் சுர்ஜேவாலா, சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு பெங்களூருவில் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவித்தனர். துணை முதலமைச்சர் பதவி டி.கே. சிவகுமாருக்கு வழங்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

காங்கிரஸ் மேலிடத்தின் இந்த முடிவால் அதிருப்தியில் இல்லை என டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். சித்தராமையாவுடன் அவர் ஒரே காரில் ஏறி கார்கே இல்லத்திற்கு சென்றார். பெங்களூருக்கு ஒன்றாக திரும்பிய அவர்களுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சித்தராமையா பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விடுத்த அழைப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஏற்றுக் கொண்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் கூட்டணிக்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்கள் பதவியேற்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.