கணக்கில் வராத ஹவாலா பணத்தை மாற்றும் குருவியாக செயல்பட்ட நபரிடம் இருந்து 30 லட்சம் ரூபாயை பறித்ததாக ஆயுதப்படை காவலர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த அழகுராஜா என்பவர் சென்னை மண்ணடியில் இருந்து 30 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்துடன் திருவல்லிக்கேணிக்கு வரும் வழியில் மன்றோ சிலை அருகே போலீஸ் உடையில் இருந்த இரண்டு பேர் அவரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
அழகுராஜாவிடம் இருந்த பணத்திற்கு ஆவணம் எதுவும் இல்லாததால், பறிமுதல் செய்வதாக கூறிய அவர்கள், அழகுராஜாவை விசாரணைக்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, முத்துசாமி பாலம் அருகே இறக்கிவிட்டு பணத்துடன் தப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் அழகுராஜா புகார் அளித்த நிலையில், அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் ஆயுதப்படை காவலர் செந்தில் மற்றும் அவரது நண்பர் டைசனை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செந்திலின் மேலும் ஒரு கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.