சித்தரவதை கூடமாக மாறும் மது அடிமைகள் மறுவாழ்வு மையங்கள்..! கத்தியால் குத்திய காட்சிகள்
Published : May 15, 2023 1:52 PM
சித்தரவதை கூடமாக மாறும் மது அடிமைகள் மறுவாழ்வு மையங்கள்..! கத்தியால் குத்திய காட்சிகள்
May 15, 2023 1:52 PM
அனுமதியின்றி செயல்பட்ட மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் குடிப்பழக்கத்தை மறக்க சிகிச்சை எடுத்து வந்த மெக்கானிக் ஒருவரை வீட்டுக்கு செல்ல அனுமதிக்காததால் தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்ட கொடுமை அரங்கேறி உள்ளது.
ஆவடி அடுத்த சேக்காடு சிந்து நகரில் ரெஸ்க்யூ பவுண்டேஷன் என்ற பெயரில் போதை மறுவாழ்வு மையம் இயங்கி வருகிறது.
இதனை பிரபுதாஸ் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
இங்கு திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் அசோக்குமார் என்பவர் மது போதையில் இருந்து விடுபட எண்ணி இரண்டு முறை இங்கு தங்கி சிகிச்சை எடுத்துச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் அசோக்குமார் மீண்டும் இங்கு சிகிச்சைக்கு சேர்ந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு போதை மறுவாழ்வு மைய ஊழியரிடம், அசோக் குமார் நாளை வீட்டுக்கு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார். அதற்கு அங்குள்ளஊழியர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
இதனால் விரக்தி அடைந்த அசோக் குமார் சாப்பாடு சாப்பிட சொல்வதுபோல் நடித்து சமையலறைக்கு சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து தனக்கு தானே வயிற்றில் குத்தி கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை கண்ட ஊழியர் சரவணன் என்பவர் அசோக்குமாரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடலில் உள்ள கத்திக் குத்து காயங்களுக்கு அறுவை செய்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இச்சம்பவம் குறித்து ஆவடி காவல் துறை விசாரணை மேற்கொண்டனர். கடந்த 2 ஆண்டுகளாக எந்த வித அரசு அனுமதியும் பெறாமல் இந்த மது அடிமைகள் மறுவாழ்வு மையம் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை பொறுத்தவரை அசோக்குமாரின் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்று விட்டதால் குடியை மறக்க வேண்டும் என்று அவரே விருப்பப்பட்டு இங்கு சேர்ந்ததாக கூறப்படுகின்றது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் மது குடிக்கும் ஆசை துளிர்விட்டதால் வீட்டுக்கு செல்ல முயன்று , முடியாததால் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருந்தாலும் அனுமதியின்றி மது அடிமைகள் மறு வாழ்வு மையம் நடத்திய பிரபு தாஸை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மதுவை மறக்கடிக்க செய்வதாக கூறி மதுப்பழக்கத்துக்கு அடிமையான நபர்களை உறவினர்கள் கட்டாயபடுத்தி சேர்த்துவிட்டு செல்லும் நிலையில் அவர்களை கடுமையாக சித்தரவதை செய்து குடியை மறக்க செய்வதை இது போன்ற முகாம்களில் உள்ளவர்கள் செய்து வருவதால் பலர் தங்கள் உயிரை இதுபோன்ற மது அடிமைகள் மறுவாழ்வு மையங்களில் இழந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது போன்ற சம்பவங்களை தடுக்க முறையான அனுமதியின்றி செயல்படும் மது அடிமைகள் மறுவாழ்வு மையங்களில் அரசு அதிகாரிகள் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.