விழுப்புரத்தில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷச் சாராயத்தை குடித்ததால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேட்டியளித்த அவர், டாஸ்மாக்கில் வாங்கப்பட்ட மதுவினை உட்கொண்டதால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது எனக் கூறினார்.
மேலும், 10 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து, மாவட்டம் முழுவதும் தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் போலீசாரின் ஆதரவோடு கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், காவல் ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே கள்ளச்சாராயத்தை விற்பனை செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த அமரன் என்பவனை போலீசார் கைது செய்தனர்.