மேற்கு வங்கத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் சுமார் 36 ஆயிரம் பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 2016ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் நியமனங்களில் பெருமளவில் பணப் பரிவர்த்தனை நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வாரியத்தின் முன்னாள் தலைவர் உட்பட அதிகாரிகள் பலர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உரிய திறனறித் தேர்வுகள் நடத்தப்படாமல், பணத்தை பெற்றுக்கொண்டு ஆசிரியர் நியமனம் நடைபெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பித்தது உயர்நீதிமன்றம்.
2016ல் பணி நியமனத் தேர்வில் பங்கேற்றவர்களுக்கு மட்டும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி, மீண்டும் உரிய திறனறி தேர்வு நடத்தி மூன்று மாதங்களுக்குள் பணி நியமன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மேற்கு வங்க முதன்மைக் கல்வி வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் அடுத்த 4 மாதங்களுக்கு உதவி ஆசிரியர்களாக தொடர்ந்து பணியாற்றலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.